Saturday, 16 February 2013

வீரப்பன் கூட்டாளிகளின் தூக்குத் தண்டனையை நிறுத்தி வைக்க பழங்குடி மாநாட்டில் வலியுறுத்தல்

வீரப்பன் கூட்டாளிகளின் தூக்குத் தண்டனையை நிறுத்திவைக்க தமிழ்நாடு பழங்குடி சங்க மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
சந்தனக்கடத்தல் வீரப்பன் தேடுதல் வேட்டையின்போது அதிரடிப்படையால் பாதிக்கப்பட்ட
பழங்குடி மக்களுக்கு நிவாரணம் வழங்கக்கோரி ஈரோடு பெரியார் மன்றத்தில் ஞாயிற்றுக்கிழமை இன்று காலை இந்த மாநாடு நடைபெற்றது.
இம்மாநாட்டுக்கு தமிழ்நாடு பழங்குடி மக்கள் சங்க மாநிலப்பொதுச்செயலர் வி.பி.குணசேகரன் தலைமை வகித்தார். இம்மாநாட்டில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலர் து.ராஜா, தேசிய செயற்குழு உறுப்பினர் த.ஸ்டாலின் குணசேகரன், மதுரை மக்கள் கண்காணிப்பக இயக்குநர் ஹென்றி டிபேன் ஆகியோர் சிறப்புவிருந்தினர்களாக பங்கேற்றனர்.
இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
* வீரப்பன் தொடர்புடைய பாலாறு குண்டுவெடிப்பு தடா வழக்கில் 1993-ம் ஆண்டில் கைதாகி மரண தண்டனை பெற்ற மீசை மாதையன், சைமன், பிலவோந்திரன், ஞானபிரகாசம் உள்ளிட்டோருக்கு விதிக்கப்பட்ட தூக்குத்தண்டனையை நிறுத்திவைக்க வேண்டும். ஆயுள் தண்டனையாக குறைக்க வேண்டும்.
* வீரப்பன் தேடுதல் வேட்டையின்போது அத்துமீறலில் ஈடுபட்ட அதிரடிப்படையினர் மீது உரிய விசாரணை நடத்த வேண்டும்.
* அதிரடிப்படையால் பாதிக்கப்பட்ட மக்களின் மறுவாழ்வுக்கு தமிழக, கர்நாடக அரசுகள் தலா ரூ.5 கோடி ஒதுக்கீடு செய்திருந்த நிலையில் மீதித்தொகையை உடனடியாக ஒதுக்க வேண்டும்.
* மனித  உரிமை மீறலில் ஈடுபட்ட அதிரடிப்படையினருக்கு வழங்கப்பட்ட பதவி மற்றும் பரிசுகள் திரும்பப்பெறப்பட வேண்டும்.
* மனித உரிமை, மனிதநேயம் குறித்து பள்ளி, கல்லூரி பாடத்திட்டத்தில் சேர்க்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
 இம்மாநாட்டில் தமிழக, கர்நாடக மாநிலங்களை சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
 இக்கூட்டத்தில் தமிழ்நாடு பழங்குடி மக்கள் சங்க மாநிலத் தலைவர் ந.நஞ்சப்பன், பவானிசாகர் தொகுதி எம்.எல்.ஏ. பி.எல்.சுந்தரம், மூத்த வழக்குரைஞர் ப.பா.மோகன், தமிழக பசுமை இயக்க தலைவர் மருத்துவர் வெ.ஜீவானந்தம், மக்கள் சிவில் உரிமைக்கழக தலைவர் ச.பாலமுருகன் உள்பட பலர் பங்கேற்றனர்.

No comments:

Post a Comment